About Me

Monday, January 30, 2012

710 அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதிருப்தி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, "எக்ஸ்பிரஸ் ஆர்டர்' வழங்கப்படாததால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 9 மற்றும், 10ம் வகுப்பு கல்வித்திறனை மேம்படுத்தவும், உயர்நிலைக் கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச் செய்யவும், மூன்றாண்டுகளுக்கு முன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், தகுதியுள்ள நடுநிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.நடப்பாண்டில், தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 710 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடுநிலைப் பள்ளியாக இருக்கும் போது, ஆசிரியர்களுக்கு அப்பகுதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் சம்பளம் பெறப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை தலைமை ஆசிரியர் மூலமாகவே சம்பளம் பெறப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் போது, துறை மாற்றப்படுவதால், உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர அப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக, "எக்ஸ்பிரஸ் ஆர்டர்' அரசால் வெளியிடப்படும்.
இந்த ஆணையை, சம்பந்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், கருவூலத்தில் சமர்ப்பித்து, "ட்ராயிங் கோடு' எண் பெற வேண்டும். அதன் பின், "பான்' எண் பெற விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்த பின்பே ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியும்.

தற்போது, 710 பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு, ஒரு மாதத்துக்கு மேலாகியும், இன்னும் எக்ஸ்பிரஸ் ஆர்டரே வெளியிடப்படாததால், டிசம்பர் மாத சம்பளம், பொங்கல் போனஸ், ஜனவரி மாத சம்பளம் ஆகியவை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் -

No comments: