About Me

Saturday, May 5, 2012

தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு ....




                 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வை, இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து மூன்று பேர் எழுதினர். இதில், 11 ஆயிரத்து 984 பேர், முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில், 2,417 பேர், நேர்முகத்தேர்வுக்கு முன்னேறினர்.இது, இறுதிக்கட்ட தேர்வு. இந்த இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 910 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில், 715 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள். இவர்களில், 420 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 255 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 157 பேர், தாழ்த்தப்பட்ட பிரிவையும், 78 பேர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவர்கள்.

முதல் இரண்டும் பெண்கள்:டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்த ஸ்நேகா அகர்வால், முதல் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்ற ருக்மணி ரியார், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே, இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய (2010) சிவில் சர்வீஸ் தேர்விலும், சென்னையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா மொகந்தி ஆகிய இரு பெண்கள் தான், முதல் இரு இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., பட்டம் பெற்ற (மின் பொறியியல்) பிரின்ஸ் தவான், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

லண்டன் பொருளாதார பள்ளி : முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மற்றும் லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் படித்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் ஆறு பேர், இந்த தேர்வை, முதன்முறையாக எழுதியவர்கள். ஏழு பேர், இரண்டாவது முறையாக எழுதியவர்கள்.முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், 13 பேர், டில்லியில் இருந்து தேர்வு எழுதியவர்கள். மூன்று பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் சண்டிகரைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர். ஐதராபாத், சென்னை, திஸ்பூர், பாட்னா, ஜம்மு ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், 15 நாட்களுக்குள், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிராமப்புற இளைஞர்கள் சாதனை: தமிழகத்தைச் சேர்ந்த 670 பேர், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு எழுதினர். இவர்களில், நேர்முகத் தேர்வுக்கு, 183 பேர் முன்னேறினர். இறுதித்தேர்வில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற, 129 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 37 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுந்தரேஷ்பாபு, 38வது இடமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., பட்டதாரி செந்தில்ராஜ், 57வது இடமும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலமுரளி, 105வது இடத்தையும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். சைதைதுரைசாமி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில், தேர்வு எழுதிய 74 பேரில், 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற இளைஞர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை, பொய்யாக்கும் விதமாக, கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகதமிழகத்தை சேர்ந்தவர் ஐந்தாவது இடம்:நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தமிழகத்தை சேர்ந்த கோபால சுந்தர ராஜ், அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். கோவை விவசாய கல்லூரியில் படித்தவர்.டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றவர்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக அளவில் ஊத்தங்கரை வக்கீல் 5ம் இடம்: ஐ.ஏ.எஸ்., தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த வழக்கறிஞர் இந்திய அளவில், 115 இடத்திலும், தமிழக அளவில், ஐந்தாவது இடத்திலும் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.
வழக்கறிஞர்:ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் ராமசாமி. இவரது மனைவி கமலம். இவரது ஐந்தாவது மகன் ராமச்சந்திரன், 26. பி.எல்., படித்துள்ள இவர், தற்போது சென் னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி எடுத்து வருகிறார். இவர் சென்னை சங்கர் ஐ.ஏ. எஸ்., அகாடமியில் படித்து ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினார். ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், ராமச்சந்திரன் இந்திய அளவில் 115 இடத்திலும், தமிழக அளவில் ஐந்தாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றார். ராமச்சந்திரன் தனது பள்ளிப் படிப்பை, ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியிலும், சென் னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியலும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல்., படிப்பும் படித்துள்ளார்.

நான்காவது முறை:தேர்ச்சி குறித்து ராமச்சந்திரன் கூறியது:கல்வியில் பின் தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நான்காவது முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றிக்கு எனது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். இந்தியாவில் உள்ள கிராமப்புற முன்னேற்றத்துக்குப் பாடுபடுவது எனது நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார். ராமச்சந்திரனின் சகோதரர் அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மற்ற இரு சகோதரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

38வது இடம்:தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்த வேளாண் பட்டதாரி சுந்தரேஷ் பாபு, 26, அகில இந்திய அளவில் 38ம் இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை முருகேசன், ஓய்வுபெற்ற எல்.ஐ.சி., அதிகாரி. தாயார் ஜெயா அரசு பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த சகோதரர் ஆனந்த் பிரகாஷ், வெளியுறவுத் துறை அதிகாரியாகவும், மற்றொரு சகோதரர் பிரேம் சந்தர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர்.

2வது முயற்சி:இந்த சாதனை குறித்து சுந்தரேஷ் பாபு கூறியதாவது: என்னுடைய 2வது முயற்சியில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றிக்காக தினமும் 8மணி நேரம் படிப்பதற்கு மட்டுமே செலவிட்டேன். எனது இந்த வெற்றிக்குப் பெற்றோரும், சகோதரர்களும் தந்த ஊக்கமே காரணம். பயிற்சி முடித்த பிறகு, சிறப்பாக மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

34 பேர் வெற்றி:சைதை துரைசாமி மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் மூலமாகத் தேர்வு எழுதியவர்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே நேர்முகத் தேர்விற்கு ஐந்து மாத காலம் பயிற்சியளிப்பது மனிதநேயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிவாசி பெண் நாகலட்சுமி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி :கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் நாகலட்சுமி,22. இவரது தந்தை செல்வராஜன். காப்பீட்டு நிறுவன அதிகாரி. தாயார் மகாலஷ்மி. கடந்த, 2010ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற பின், சிவில் சர்வீஸ் தேர்வு முயற்சியில் இறங்கினார். வரலாறு மற்றும் புவியியலை விருப்பப்பாடமாக தேர்வு செய்தார். தன்னுடைய முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில், 231ம் இடத்தைப் பெற்றுள்ளார்.ஆதிவாசி கொண்டாரெட்டி பிரிவைச் சேர்ந்த நாகலட்சுமி கூறியதாவது: பொறியியல் இறுதித் தேர்வை எழுதும் வரை, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் இல்லை. நிறைய சவால்களும், பொதுமக்களுக்கு நேரடியாக உதவக்கூடிய வாய்ப்புள்ள பணி என்பதால் சிவில் சர்வீஸை தேர்வு செய்தேன். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுதான் முக்கியமானது. அப்படி செய்வது நல்லதா கெட்டதா என்பது அந்த சூழ்நிலையைப் பொறுத்து அமையும்.இவ்வாறு நாகலட்சுமி கூறினார்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் மேலூர் பெண் வெற்றி: மேலூர் கத்தப்பட்டி அருகில் உள்ளது பூலாம்பட்டி. இவ்வூரைச் சேர்ந்த சந்திரமோகன், மதுரை கலெக்டர் ஆபீஸ் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சிறு ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீ இந்துமதி, 27, இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., தேர்வில், 151வது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஸ்ரீ இந்துமதி கூறியதாவது: மதுரையில் ஒரு சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் எனது தந்தை சந்திரமோகன். தாயார் பாண்டியம்மாள் வீட்டில் உள்ளார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான், ஆரம்பக் கல்வியை பொன்மேனியில் உள்ள ஜீவா பள்ளியில் முடித்தேன். பின்னர், சிவகங்கை மாவட்டம் பொட்டபாளையத்தில் உள்ள கே.எல்.என்., சி.ஐ.டி., கல்லூரியில் இ.இ.இ., 2006ம் ஆண்டு முடித்தேன். சிறு வயது முதல் கலெக்டர் ஆவது என லட்சியமாக இருந்ததால், தொடர்ந்து அதற்கு முயற்சி செய்து வந்தேன். தொடர்ந்து ஐந்து முறை தேர்வு எழுதி, இரண்டாவது முறை இன்டர்வியூவில் பாஸ் செய்து, தற்போது ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வு பெற்றுள்ளேன். அகில இந்திய அளவில் 910 பேர் தேர்வு பெற்றதில், நான் 151வது இடத்தைப் பெற்றுள்ளேன். இனி, உத்தரகண்ட் மாநிலம் முசுரியில் 21 மாத டிரைனிங் உள்ளது. மன்னார்குடியில் உள்ள கள்ளர் மகா சங்கம் மூலம் உதவி பெற்று, டில்லியில் இரண்டு ஆண்டுகள் தங்கி படித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளேன். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், தோல்வியைக் கண்டு துவளாமல் தொடர்ந்து படித்தால், அனைவரும் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற முடியும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஸ்ரீ இந்துமதி.தீர்க்கமான முடிவுக்கு தோல்வி இல்லை: ஆர்த்தி:அவரது பேட்டி:எம்.பி.பி.எஸ்., சேர முயற்சித்தேன். அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. சென்னை பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, இறுதியாண்டு தேர்வு எழுதும் வரை, மனதுக்குள் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது, அதன் விளைவே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு என்னைத் துண்டியது. மதுராந்தகம் அருகே நல்லூர் கிராமத்தில் பிறந்தேன். முதன்மை தேர்வுக்கு உளவியல், மானுடவியலையும் தேர்வு செய்தேன். ஆறு பேர் கொண்ட குழுவினர், நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்டனர். நீரோடை எப்படி இயல்பாக செல்லுமோ; அதுபோல் தான் உரையாடல்கள் இருந்தன. மருத்துவரான நீங்கள் எதற்காக ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, கேட்டனர். நமது நாடு மருத்துவத்தில் மட்டும் பின் தங்கி இல்லை. கல்வி உள்ளிட்ட அத்தனை விஷயங்களிலும் பின் தங்கியுள்ளோம். அதற்காக, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, தெரிவித்தேன்.இவ்வாறு ஆர்த்தி தெரிவித்தார்.

No comments: