About Me

Wednesday, May 9, 2012

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது : பள்ளி கல்வித்துறை


கோடைகால விடுமுறையை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பள்ளிகளில் பணிபுரியும் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு
மே மாத சம்பளம் வழங்க கூடாது என பள்ளி கல்வித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி, கம்ப்யூட்டர் சயின்ஸ், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் துறை உள்ளிட்ட தொழிற் கல்விகளுக்கு 16 ஆயிரம் சிறப்பு பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த பிப்ரவரியில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஆணையும் வழங்கப்பட்டன. இவர்கள் தினமும் 3 மணி நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும். பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும். இவர்களுக்கு மாதச் சம்பளமாக  5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு கடந்த ஏப்.28ம் தேதியுடன் முடிந்தது.

2ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளி வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்பட உள்ளது. மே மாதம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் இந்த காலத்திற்கு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாமா என தலைமையாசிரியர்கள் பள்ளி கல்வித்துறையை கேட்டனர். முதலில் விடுமுறை நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் என அரசு அறிவித்திருந்தது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அவசரமாக ஒரு உத்தரவிட்டுள்ளது. அதில் பள்ளி விடுமுறை காலத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என கூறியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் மூலம் அனுப்பப்பட்டது. இந்த உத்தரவினால், 16 ஆயிரம் பேர் மே மாதம் சம்பளம் இல்லை என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




No comments: