About Me

Monday, August 13, 2012

குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் மறுதேர்வை எழுதலாம். மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.

குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நடந்து முடிந்த  தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் மறுதேர்வை எழுதலாம். மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நேற்று நடந்த குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.    இன்று மதியம் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.     இது குறித்து டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.தேர்வுக்கு விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் இனி அரசுத் தேர்வே எழுத முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறியுள்ளார்.டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட்டான விவகாரத்தில் 3 ஆசிரியர்கள், தம்பதியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கிலி தொடர்போல் தமிழகம் முழுவதும் பலருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அவுட் ஆனதால், தேர்வு ரத்தாகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு அலுவலர், கூட்டுறவு தணிக்கை அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 3687 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 144 மையங்களில் 6.4 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆனதாக பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி முத்தானூரை சேர்ந்த சுரேஷ்குமார், கம்பைநல்லூர் அரசு பள்ளியில் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பு அவர் வைத்திருந்த ஒரு பேப்பரை தேர்வுக்கூட கண்காணிப்பாளரான துணை தாசில்தார் கருப்பசாமி பறிமுதல் செய்தார். தேர்வு முடிந்து மகிழ்ச்சியுடன் சுரேஷ்குமார் வருவதை பார்த்த துணை தாசில்தார், சந்தேகப்பட்டு அவரிடம் பறிமுதல் செய்த பேப்பரை பிரித்து பார்த்தார். அது, குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் நகல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.போலீசாரிடம் சுரேஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் வசிக்கும் தங்கையை பார்க்க அடிக்கடி செல்வேன். அப்போது ஆசிரியர் விவேகானந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பலமுறை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியும் வேலை கிடைக்கவில்லை என்று அவரிடம் கூறி வருத்தப்பட்டேன். பணம் கொடுத்தால் வினாத்தாள் கிடைக்கும். தேர்வை ஈஸியாக எழுதி அரசு வேலை வாங்கி விடலாம். இதுபற்றி திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கராஜன், குமார் ஆகியோரை தொடர்பு கொள்ளுங்கள்என விவேகானந்தன் கூறினார். அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது, வினாத்தாளுக்கு ரூ.4 லட்சம் தர வேண்டும் என கேட்டனர்.இதைபற்றி எனது நண்பர்கள் அருண், பூபேஸ் மற்றும் ஒருவரிடம் கூறினேன்.

எல்லாரும் சேர்ந்து அம்மா, மனைவி நகைகளை அடகு வைத்து தலா ரூ.1 லட்சம் புரட்டினோம். அதை ரங்கராஜன், குமாரிடம் கொடுத்து குரூப் 2 வினாத்தாள் ஜெராக்ஸ் பிரதிகளை வாங்கினோம். ஏ 4 சைசில், 59 பக்கம் கையால் எழுதிய ஜெராக்ஸ் பிரதிகளை அவர்கள் கொடுத்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதையடுத்து விவேகானந்தன், ரங்கராஜன், குமார், அருண், பூபேஸ் மற்றும் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிப்படை போலீசார், நேற்றிரவு சுரேஷ்குமாருடன் திருவண்ணாமலை விரைந்தனர். அங்கு விடிய விடிய தீவிர விசாரணை நடத்தி, 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

வினாத்தாள் நகல் விற்ற ரங்கராஜன் (40), விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது. அவரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். கைதான ரங்கராஜன், சுரேஷ்குமார் மற்றும் 2 பேரிடம்  தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வினாத்தாள் அவுட் ஆன விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பலருக்கு சங்கிலி தொடர்போல தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வினாத்தாளை யாரிடம் வாங்கினார்கள், இதில் அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, பவானியை சேர்ந்த தனக்கொடி உள்ளிட்ட சிலர் நேற்று குரூப் 2 தேர்வு எழுதினர்.

அவர்கள் தேர்வு முடிந்ததும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம், வினாத்தாள் அவுட் ஆகி விட்டதாக புகார் அளித்தனர். பஸ்சில் வந்தபோது, சீட்டுக்கு அடியில் கிடந்த வினாத்தாள் ஜெராக்ஸ் காப்பியை தனது கணவர் செந்தில் கண்டெடுத்து, தன்னிடம் கொடுத்ததாகவும் அது ஒரிஜினல் வினாத்தாள் போன்று இருந்ததாகவும் தனக்கொடி கூறியிருந்தார். இதுதொடர்பாக கோட்டாட்சியர் சுகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 2 மணி வரை தனக்கொடியிடமும், செந்திலிடமும்  விசாரணை நடத்தப்பட்டது. ஈரோடு டிஎஸ்பி பெரியய்யா தலைமையிலான போலீசார் செந்திலை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

திருச்செங்கோட்டை சேர்ந்த சுதாகர் என்பவரிடம் பணம் கொடுத்து வினாத்தாளை வாங்கியதாகவும், அதை மனைவிடம் கொடுத்து தேர்வு எழுத அனுப்பியதாகவும் செந்தில் கூறினார். அவர் வைத்திருந்த மாடல் பேப்பரை சக தேர்வர்கள் வாங்கி பார்த்தபோது ஒரிஜினல் வினாத்தாளில் உள்ள கேள்விகள் அப்படியே இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு, கலெக்டரிடம் புகார் கொடுக்க சென்றனர். சந்தேகம் வராமல் இருக்க எனது மனைவியும் அவர்களுடன் சென்றாள்என தெரிவித்தார். இதையடுத்து செந்தில், தனக்கொடியை போலீசார் கைது செய்தனர். செந்திலிடம் வினாத்தாளை விற்ற சுதாகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவுட்டான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து ஸ்கேன் செய்து அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வினாத்தாள் நகல் அனுப்பப்பட்டிருக்குமோ என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தேர்வுக்கு முதல்நாளில் வினாத்தாள் வெளியாகி இருக்க வாய்ப்பில்லை. கடலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வினாத்தாள்களுடன் விடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனால், வினாத்தாள் அச்சடிக்கப்பட்டதும் புரோக்கர்களின் கைகளுக்கு சென்று, விடைகள் முழுமையாக தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தேர்வை ரத்து செய்வதோடு, சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

No comments: