About Me

Thursday, May 15, 2014

தலைமை ஆசிரியர்கள் சஸ்பென்ட் : பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்...

+2 தேர்வில் , மாணவர்கள் தேர்ச்சி குறைவு என்பதைக் காரணம் காட்டி, தலைமை ஆசிரியர்கள் மூவரை இடைநீக்கம் செய்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் தேர்வில் பள்ளி மாணவர்கள் அதிகத் தேர்ச்சி விகிதம் பெறாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மூன்று தலைமை ஆசிரியர்களை இடைநீக்கம் செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நடவடிக்கை நியாயமானது அல்ல.
மாணவர்களின் கல்விக்கும், தேர்ச்சிக்கும் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே தான் பொறுப்பு என்று அறுதியிட்டு ஒரு தீர்ப்பு சொல்வதாக அமைந்துள்ளது இந்த நடவடிக்கை.
பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிகளையும், அவர்களது பள்ளிக்கல்வியின்; தரத்தையும்; கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் அவர்களது பணிகளை காலமுறைப்படி சரிவர செய்திருப்பார்கள் என்றால், இன்னின்ன பள்ளிகளில் மாணவர்கள் படிப்பில் பலவீனமாக உள்ளார்கள் என்பதை தேர்வுக்கு பல மாதங்களுக்கு முன்பே கண்டறிந்திருக்கலாமே?
அதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்தப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் அதிகாரிகள் பேசி, மாணவர்களின் படிப்பில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் தவறினால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையை அப்போதே தெரிவித்திருக்கலாமே?
இது எல்லாத்துறைகளின் பணிகளிலும் நடைமுறையில் இருந்து வரும் வழக்கமான நடவடிக்கைகள்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அக்கண்காணிப்புப்பணிகள் கல்வி அதிகாரிகளால் முறைப்படி நடத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை மட்டும் வைத்து தலைமை ஆசிரியர்களை பழிவாங்குவது எப்படி நியாயமாகும்?
அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் மிக மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள மாவட்டமும் உண்டு. பல்வேறு பள்ளிகளும் உண்டு அந்த தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் இடைநீக்கம் மாணவர்களின் தேர்ச்சிக்கு பல காரணம். பலர் காரணம். ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் அதில் முக்கியமானவர்களே.
எனவே இனி;யாவது அனைவரும் எச்சரிக்கை உணர்வோடு அவரவர் தங்களது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தலாமே தவிர தலைமை ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து அவர்களது குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
இனிவரும் ஆண்டுகளில் பள்ளிகள் இத்தனை சதவிகிதம் தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்ற இலக்கை வெளியிட்டு, அதை எட்டாத போது அதற்கு யார் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரத்தையும் வெளி;ப்படையாக கல்வித்துறை அறிவிக்க வேண்டும்.
அதே நேரத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தி, கற்பிக்கும் வழிமுறைகளையும் நவீனப்படுத்தி, அதில் அவர்கள் ஈடுபாட்டுணர்வோடு
பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திட உரிய நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி சிறப்படைய இவ்வாறு மேலும் சீரமைக்கும் பணிக்கு கல்வித்துறை வழிவகைகளை காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: