About Me

Wednesday, July 30, 2014

அரசு இணையதளம் மூலம் அனைத்துத் துறைகளின் சேவைகள்


பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்பட தமிழக அரசின் இணையதளம் மூலம் அனைத்துத் துறைகளின் சேவைகளையும் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக, அரசு இணையதளத்தில் உள்ள விவரங்களைப் புதுப்பிக்கவும், மக்களுக்குப் பயனுள்ள தகவல்களைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசுக்கென தனியாக இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) இயங்கி வருகிறது. இந்த இணையதளத்திலுள்ள விவரங்களை ஒவ்வொரு அரசுத் துறைகளும் அளித்தாலும், அவற்றைப் பராமரிக்கும் பணியை தேசிய தகவலியல் மையம் செய்து வருகிறது. இந்த இணையதளத்தில் அரசுத் துறைகளின் விவரங்கள், அமைச்சர்களின் பெயர்கள், எந்தெந்த துறைக்கு யார் அதிகாரிகள், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் கொள்கை விளக்கக் குறிப்புகள், மக்கள் சாசனம், முக்கியத் துறைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், செய்திக் குறிப்புகள், முக்கிய அரசு உத்தரவுகள் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இந்த இணையதளத்தை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதைத் தவிர்த்து பொதுமக்களுக்கான இணையதளமாக மாற்றும்

முயற்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியை ஒருங்கிணைத்துச் செல்லும் நிறுவனமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நியமிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டப் பணிகள்: தமிழக அரசின் இணையதளத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளமாக மாற்றுவதற்கான முதல் கட்டப் பணியாக ஒவ்வொரு அரசுத் துறையிலும் உள்ள விவரங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட உள்ளன. இதற்காக தனியே மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை இயக்குவதற்கான பயிற்சிகள் அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட உள்ளன.

தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு துறையிலும் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் முதல் இணைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் வரை இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான உத்தரவை தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் அண்மையில் பிறப்பித்தார்.

என்னென்ன விவரங்கள்? ஒவ்வொரு துறையிலும் வழங்கப்படும் சேவைகள், திட்டங்கள், அந்தத் திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள், துறையிலுள்ள முக்கிய சட்டங்கள், உத்தரவுகள் உள்ளிட்ட விவரங்கள் தொகுக்கப்பட உள்ளன. அனைத்துத் தரப்பினரும் தெளிவாகப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதியாக விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரங்களைத் தொகுப்பது, அவற்றை சிறந்த முறையில் உருவாக்குவது போன்ற பணிகளில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஒரு உதவிப் பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து வகையான விவரங்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்ட பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்பட முக்கிய சேவைகளைப் பெறுவதற்கான இணையதளமாக தமிழக அரசின் இணையதளம் மாறும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பயன் என்ன? தமிழக அரசில் மொத்தம் 32-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்தத் துறைகளின் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை இப்போது தனித்தனியாக அதாவது மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாக இணையதளங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசின் இணையதளத்தை மேம்படுத்துவதன் மூலம் அனைத்துத் துறைகளின் சேவைகளையும் அந்த இணையதளத்தின் வாயிலாக வழங்க வழி ஏற்படும்.

No comments: