தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் புதன்கிழமை (ஜூலை 30) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். தவிர, 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
இது தொடர்பாக, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவரது மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ஆம் தேதி மாற்றப்பட்டது.
இங்கு சாட்சிகள் விசாரணை 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22 மாதங்கள் நடைபெற்று வந்தன. விசாரணை ஜூலை 17-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment