About Me

Saturday, August 27, 2011

ஒரே மாதிரி புத்தகப் பைகள், ஜாமென்ட்ரி பாக்ஸ்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்கு தேவையான கணித உபகரணப் பெட்டி, அதாவது ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை, வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு 119 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்படும்.

புத்தகச் சுமையை குறைக்க புதிய திட்டம் : குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக, புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில், தமிழகத்தில் முப்பருவ முறை, அறிமுகப்படுத்தப்படும்.

முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள், மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் நீக்கப்படும்.

புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதை தவிர்க்கும் வகையில், அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

செஸ் விளையாட்டு : குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஏழு முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு, செஸ் விளையாட்டு, வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

கல்வி செயற்கைக் கோள் திட்டம் : அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் ict@schools (information and communication technolgy@schools) tamilnadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்களின் உட்பொருளை, கம்ப்யூட்டர்மயமாக மாற்றி, மைய கம்ப்யூட்டர் மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும்.

எல்லா மாணவ, மாணவியரும் பயனடையும் வகையில், சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள், கல்வி செயற்கைக் கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய, இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: