About Me

Sunday, August 28, 2011

குழந்தை இயல்புக்கு ஏற்ற மாண்டசோரி கல்விமுறை

கல்வி என்பது மனிதனுக்குள் பொக்கிஷங்களாய் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கான ஒரு மந்திரம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பரிணாம வளர்ச்சியில் கல்வி என்பது ஒரு முடிவடையாத அம்சமாய் உள்ளது.
அத்தகைய கல்வியை, மனித வாழ்வின் ஆரம்ப நிலையான குழந்தை பருவத்தில், சிறப்பு வாய்ந்த முறையில் எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பதில் பலவித முரண்பாடுகளும் நிலைகளும் உள்ளன. 20௦ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மரியா மாண்டிசோரி வன்ற இத்தாலிய பெண்மணி குழந்தை கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சியை ஏற்படுத்தினார்.
அவர் உருவாக்கியதுதான் இன்று உலகெங்கிலும் பரவலாக இருக்கும் மாண்டிசோரி கல்வி முறை. குழந்தைகளின் இயல்பான உளவியல் பண்புகளுக்கு ஏற்ப, சுதந்திரமான சூழ்நிலையில் அவர்களுக்கு கல்வி அளிக்கும் இந்த கல்விமுறையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது முக்கியம். இன்றைய இந்திய பள்ளிகளில், சிறு குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மனம் சார்ந்த வன்முறைகள் நிறைந்திருக்கும் ஒரு ஆபத்தான காலகட்டத்தில், மாண்டசோரி போன்ற ஒரு கல்விமுறை சமூகத்திற்கு அவசியமான ஒன்றாகிறது.
மாண்டிசோரி கல்வி முறையின் தொடக்கம்
கடந்த 1897 ம் ஆண்டு இந்த கல்வி திட்டத்திற்கான தத்துவங்களையும், வரைமுறைகளையும் மரியா மாண்டிசோரி உருவாக்கினார். ரோம் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் தொடர்பான பாடங்களை படித்தார். மேலும், அவருக்கு முந்தைய 200 ஆண்டுகளின் கல்வி முறைகள் பற்றியும் படித்தார். 1907 ம் ஆண்டு, ரோம் நகரில் ஒரு சிறிய வசதி குறைந்த கட்டிடத்தில், தனது புதிய கல்விமுறைக்கான முதல் வகுப்பை தொடங்கினார்.
இக்கல்விமுறை, 1911 ம் ஆண்டில் அமெரிக்காவில் பரவியது. மாண்டிசோரி அம்மையார், தனது வாழ்நாள் முழுவதும் இக்கல்வி முறையின் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டார். மனிதனின் பிறப்பிலிருந்து, 24 வரையிலான உளவியல் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், 3 வயதுவரை, 3 முதல் 6 வயதுவரை, 6 முதல் 12 வயதுவரை மற்றும் 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பொருத்தமான கல்வி முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
உபகரணப்(equipment) பயன்பாடு
இந்தக் கல்விமுறையில் குழந்தைகளின் உடலமைப்பிற்கு ஏற்றவாறான உபகரணங்கள்(EQUIPMENTS), அவர்களின் கண்களில் படும்படியும், கைகளுக்கு எட்டும்படியும் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும். இக்கல்வி முறையில், குழந்தைகளுக்கு, அவர்கள் இருக்கும் சூழலில் முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதனால் அவர்கள், தங்களது சுதந்திரமான சூழலின் சுதந்திரமான மனநிலையோடு, தங்களுக்கு விருப்பமான உபகரணங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கும் உபகரணங்களைக் கொண்டு, பல அசைவுகளின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இந்த அசைவுகளால் குழந்தையின் தசை அசைவுகள் மேம்படுகின்றன. இதனால் குழந்தைக்கு தன்னைப் பற்றியும், சூழலைப் பற்றியும் பொறுப்புணர்ச்சி வளர்கிறது. இந்தப் பொறுப்புணர்ச்சி, அன்றாட வாழ்க்கைப் பயிற்சி உபகரணங்கள் மூலம் ஏற்படுகிறது. அன்றாட வாழ்க்கைப் பயிற்சி உபகரணங்கள் என்பது, குழந்தைகள் தங்களது வீட்டில் தினமும் பார்க்கும் தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிணைதல் மற்றும் உருட்டுதல், காய்கறி வெட்டுதல் மற்றும் பொருட்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பல செயல்களை உள்ளடக்கியது. இத்தகைய வேலைகளை நமது குழந்தைகள் வீட்டில் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் மாண்டசோரி கல்விமுறையில் இந்த செயல்களை செய்வதற்கு அனுமதி அளித்து, அவற்றை செய்வதற்கான முறையை ஒரு சில அசைவுகளுடன் அறிமுகம் செய்கிறார்கள்.
இதன்பொருட்டு, குழந்தைகளின் கைகளுக்கு அடக்கமான உபகரணங்களை தேர்ந்தெடுத்து காட்சியில் வைக்கிறார்கள். இவையே, அன்றாட வாழ்க்கைப் பயிற்சி உபகரணங்கள். இவற்றை குழந்தைகள் திரும்பத் திரும்ப செய்வதன்மூலம், தங்களின் இயல்பு குணத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
அறிவுக்கு ஏற்றதான செயல்கள்
புலன்களையும், கைகளையும் உபயோகித்து செய்யும்போது, அதை புலனார்ந்த செயல்பாடுகள் என்கிறோம். ஒரு குழந்தைக்கு தன்னுடைய சூழலைப் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு இந்த புலனார்ந்த செயல்களை அளிக்கிறோம். இதன்பொருட்டு, மாண்டசோரி அம்மையார், சில பிரத்யேக உபகரணங்களை உருவாக்கினார். அந்த உபகரணங்கள் விஞ்ஞான அடிப்படையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை. கணிதம் சார்ந்த கருத்தடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பெளதீகப் பண்புகளைக் கொண்டவை.
இத்தகைய உபகரணங்களின் மூலம் செயல்பாடுகளை மேற்கொண்ட குழந்தைகளுக்கு, அந்த உபகரணங்களைப் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கிறது. அதன் பெளதீகப் பண்புகளை அடையாளம் கண்டு, பார்க்குமிடங்களிலெல்லாம் உற்சாகத்துடன் தெரிந்து கொள்கிறார்கள். நுணுக்கமாக செயல்படுவதன் மூலம், குழந்தையின் அறிவுக்கும் நுட்பமான விபரங்கள் கிடைக்கின்றன. இதனால் குழந்தையின் ஆளுமையும் வளர்கிறது. இதன்மூலம், குழந்தைக்கு விஞ்ஞான ரீதியில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது.
குழந்தைக்கு சுமாராக 3.5 வயது இருக்கும்பொழுது, திட்பநுட்ப அறிவு என்பது அவர்களுக்கு விழிப்பூட்டுகிறது. ஆகையால்தான், இத்தகைய காலகட்டத்தில் அவர்களுக்கு எண்கணிதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இவற்றுக்காக உருவாக்கப்பட்ட உபகரணங்களைக் கொண்டு, குழந்தைகளுக்கு கணிதம் சார்ந்த செயல்பாடுகளை அளிக்கிறோம். இதன்மூலம் அவர்கள், எண்களைப் பற்றியும், எண்ணிக்கையைப் பற்றியும், அவற்றுக்கிடையே உள்ள தொடர்பு பற்றியும், தசாம்ச முறைப் பற்றியும், அவற்றின் விதிமுறைகள் பற்றியும், நான்கு கணித கிரியைகளின்(+,-, x,%) சிறப்பு அம்சங்களைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
மொழி மேம்பாடு
மொழி என்பது மனித பரிணாம வளர்ச்சியின் ஒரு தவிர்க்கவியலா அம்சம். குழந்தைகள், தாங்கள் பிறந்த பின்பு ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து, பல அசைவுகளை செய்து பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் பேசும் திறன் படிப்படியாக மேம்பாடு அடைகிறது. அவர்கள் 2.5 வயதிற்குள் அனைத்துவித ஒலிகளையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இந்த வயதில்தான், பொதுவாக குழந்தைகள், குழந்தைகள் மையங்களுக்கு வருகிறார்கள். இவ்வாறு வரும் குழந்தைகளுக்கு மாண்டசோரி கல்விமுறையில், ஒலிகளின் அளவில், சொற்களின் அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிகப்படியான பல வார்த்தைகள், செயல்பாட்டின் மூலம் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஒலியால் உருவானதுதான் நாம் பேசும் மொழி. அந்த ஒலிகளைப் பற்றிய விழிப்புணர்வு மாண்டசோரி முறையில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
ஒலிகளைப் பிரித்து அறிதல்(Phonetical analysis), ஒரு சொல்லில் உள்ள அனைத்து ஒலிகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்து அறிதல் ஆகியவற்றுக்கான செயல்பாடுகள் மாண்டசோரி கல்விமுறையில் உள்ளன. உதாரணமாக MILK என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால், அந்த வார்த்தையில் இறுதியாக கேட்கும் க்(K) ஒலியை கூறி, அது செயல்பாடாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதேபோல் முதல் ஒலியான ம்(M) ஒலி மற்றொரு செயல்பாடாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த முறையில் பயிற்சியளிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையும் பல ஒலிகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். மாண்டசோரி முறையில் எழுத்துக்கள் ABCD என்ற முறையில் அறிமுகம் செய்யப்படுவதில்லை. மாறாக, A-அ, B-ப், C-க், D-ட், E-இ,ஏ, F-ப் என்ற முறையில் அனைத்து எழுத்துக்களுக்கும் ஒலி அமைப்புகள்தான் அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றை நன்கு கற்று, பின்னர் சூழலை விட்டு செல்லும்போது, ABCD என்று அதன் பெயர் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒலிகள் என்பவை நாம் உச்சரித்து முடித்தவுடன் காற்றில் மறைந்து விடுகின்றன. எனவே, ஒலிகளின் அடிப்படையில் செயல்பாடுகளை மேற்கொள்வது கடினம். எனவே, ஒலிகளுக்கு உருவம் கொடுப்பதற்கு, அதற்கேற்ற குறிகள் தேவை. அதற்கு உபகரணம் தேவை. எனவே, எழுத்துக்களை உப்புத்தாளில் வடிவங்களாக வெட்டி,  மரப்பலகையில் வலது பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கும். குழந்தைகள், பலகையில் இடதுபக்கத்தில் கைகளை வைத்துக் கொள்வார்கள். அவர்கள், தங்களது வலதுகையின் ஆள்காட்டி விரல்கள், நடுவிரல்களைப் பயன்படுத்தி எழுதும் திசையிலேயே வருடுவார்கள். அவ்வாறு வருடும்போது, குழந்தைகள் அந்த எழுத்தின் ஒலியைக் கூறுவார்கள். இதன்மூலம் அவர்களின் மொழித்திறன் இயல்பான முறையில் மேம்படுகிறது.

No comments: