About Me

Friday, August 19, 2011

செயல் வழி கற்றல் அட்டைகளை பயன்படுத்த தடை : சமச்சீர் கல்வி மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும்

திருநெல்வேலி : தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல் வழி கற்றல் முறையை நீக்கி சமச்சீர் கல்வி பாட புத்தகங்களின் மூலம் வகுப்பறை நிகழ்வுகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் "குஷி' அடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்க நிலை, நடுநிலை வகுப்புகளில் செயல் வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை, எளிய படைப்பாற்றல் கல்வி முறை உட்பட பல்வேறு முறைகளின் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாட திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொடக்க, நடுநிலை வகுப்புகளில் எந்த பாட முறைகளின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் ஆசிரிய, ஆசிரியைகளிடையே ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதில் தமிழகத்தில் 1-8ம் வகுப்பு வரை அøன்தது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல் வழி கற்றல் (ஏ.பி.எல்), எளிய படைப்பாற்றல் கல்வி (எஸ்.ஏ.எல்.எம்), மற்றும் படைப்பாற்றல் கல்வி செயல்முறைகளை செயல்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
*1-4ம் வகுப்புகளை பொறுத்தவரை சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் அடிப்படையில் 2010-11ல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள செயல் வழி கற்றல் அட்டைகளை கொண்டு வகுப்பறை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
*2, 3 மற்றும் 4ம் வகுப்புகளை பொறுத்தவரை செயல் வழி கற்றல் அட்டைகளில் பொதுவான கற்றல் அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி வகுப்பறை நிகழ்வுகளை அமைத்து கொள்ள வேண்டும்.
*செயல் வழி கற்றல் முறையில் தயாரிக்கப்பட்ட பழைய அட்டைகள் தற்போது பயன்படுத்தாமல் உள்ளனவற்றை அடுக்கி பாதுகாப்பாக அனைத்து பள்ளிகளிலும் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.
*பழைய பாட புத்தகங்களை அடிப்படையாக கொண்ட கற்றல் அட்டைகளை நீக்கி விட்டு அதற்கு பதிலாக சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் இருக்கும் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு வகுப்பறை நிகழ்வுகளை அமைத்து கொள்ள வேண்டும்.
*புதிய பாட புத்தகங்களில் பக்க எண்ணை குறிப்பிட்டு ஏணி படியிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
*5ம் வகுப்பை பொறுத்தவரை எளிய படைப்பாற்றல் கல்வி மூலம் வகுப்பறை நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேட்டை பயன்படுத்த கூடாது. எனினும், எளிய படைப்பாற்றல் கல்வி முறையில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பின்பற்றி நடத்த வேண்டும். *6-8ம் வகுப்புகளை பொறுத்தவரை படைப்பாற்றல் கல்வி மூலம் வகுப்பறை நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளை பயன்படுத்த கூடாது. எனினும், படைப்பாற்றல் கல்வி முறையின்படி ஆசிரியர்களே சமச்சீர் கல்வி பாட புத்தகத்தை பின்பற்றி பாட குறிப்புகளை தயாரித்து நடத்த வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர், மாநில தொடக்க கல்வித் துறை இயக்குனர் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் "குஷி': தமிழகத்தில் செயல் வழி கற்றல் முறைக்கு பல்வேறு ஆசிரிய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. தற்போது செயல் வழி கற்றல் முறையை ஓரங்கட்டி சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பின்பற்றி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் "குஷி' அடைந்துள்ளனர்.

No comments: