About Me

Monday, September 26, 2011

கூடுதல் பாடப் புத்தகங்கள் அச்சிட உத்தரவு-26-09-2011

பல்வேறு மாவட்டங்களில், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் பாடப் புத்தகங்களை அச்சிட, பாட நூல் கழகம், ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், அமலுக்கு வருவது சமச்சீர் கல்வி திட்டமா, பழைய பாடத் திட்டமா என்பதில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, தேவையான அளவிற்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.
இரண்டு மாத இடைவெளிக்குப் பின், சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரை குறையாக அச்சிடப்பட்டிருந்த சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. முழுமையான அளவில், பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் போய்ச்சேரவில்லை என கூறப்படுகிறது. இதில், தனியார் பள்ளிகளும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை பெற போட்டி போட்டதால், பாடப் புத்தகங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடலூர், தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள சில தனியார் பள்ளி மாணவர்கள், கிடைத்த பாடப் புத்தகங்களை ஜெராக்ஸ் எடுத்து, படித்து வருகின்றனர்.
இம்மாவட்டங்களில், 8ம் வகுப்பில் ஆங்கிலம், 9ம் வகுப்பில் கணிதம், 10ம் வகுப்பில் சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பரவலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாடப் புத்தகங்கள் தேவை இருப்பதை கருத்தில்கொண்டு, கூடுதலாக சில லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட, பாடநூல் கழகம், ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னையில் உள்ள பல்வேறு அச்சகங்களுக்கு, கடந்த 22ம் தேதி, ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. சென்னை புறநகரில் உள்ள ஒரு அச்சகத்திற்கு, 9ம் வகுப்பு சமூக அறிவியலில் (தமிழ் மீடியம்), 1 லட்சத்து, 31 ஆயிரம் பாடப் புத்தகங்கள் அச்சிட, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
அதேபோல், சென்னை நகரில் உள்ள ஒரு அச்சகத்திற்கு, 10ம் வகுப்பு சமூக அறிவியலில் (தமிழ் மீடியம்), 55 ஆயிரம் புத்தகங்கள், மற்றொரு அச்சகத்திற்கு, 9ம் வகுப்பு கணிதத்திற்கு, 60 ஆயிரம் புத்தகங்கள், ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல அச்சகங்களில், கூடுதல் பாடப் புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடப் புத்தகங்கள் அனைத்தையும், அக்டோபர் 7ம் தேதிக்குள், வழங்கிவிட வேண்டும் வேண்டும் என, பாடநூல் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. பாடப் புத்தகங்களுக்கான பேப்பர்களை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், நேரடியாக சம்பந்தப்பட்ட அச்சகங்களில் சப்ளை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறித்த தேதிக்குள் பாடப் புத்தகங்கள் தயாராகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஏனெனில், பல அச்சகங்களுக்கு இன்னும் பேப்பர்கள் போய்ச் சேரவில்லை. முன்கூட்டியே தேவையான பாடப் புத்தகங்கள் குறித்து சரியாக கணக்கெடுக்கப்படாததால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன
குறுகிய காலத்திற்குள் பாடப் புத்தகங்களை அச்சிட்டுக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து, அச்சக அதிபர் கூறியதாவது: "டி.என்.பி.எல்., (தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்) நிறுவனத்தில் இருந்து, பல அச்சகங்களுக்கு இன்னும் பேப்பர்கள் வரவில்லை. ஒரு சில அச்சகங்களுக்கு பேப்பர்கள் சென்றுள்ளன. அக்., 7ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அச்சிட்டு முடிப்பதற்கு சாத்தியம் இல்லை. தீபாவளி நெருக்கத்தில் தான் பாடப் புத்தகங்கள் தயாராகும். அவற்றை, பேக் செய்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும். எனவே, தீபாவளிக்குப் பிறகே, மாவட்டங்களுக்கு பாடப் புத்தகங்கள் போய்ச் சேரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Thanks.

No comments: