About Me

Monday, September 26, 2011

4ம் வகுப்பு பாட புத்தகத்தில் ராஜா தேசிங்கு குறித்து தவறான தகவல்-26-09-2011

செஞ்சி: நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், ராஜா தேசிங்கு குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள கோட்டைகளில் முழு அமைப்புடன் இருப்பது செஞ்சிக் கோட்டை. இது ஒரு புறம் இருந்தாலும், செஞ்சியை ஆட்சி செய்த இளம் வயது மன்னன் ராஜா தேசிங்கின் வீரமே செஞ்சிக் கோட்டை இன்றளவும் போற்றப்படுவதற்கு காரணமாக உள்ளது. இந்த ஆண்டு சமச்சீர் பாடப் புத்தகத்தில் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 15வது பாடமாக, படித்தால் தெரியும் என்ற தலைப்பில் செஞ்சிக் கோட்டைக்குக் கல்விச்
சுற்றுலா சென்றதை பாடமாக வைத்துள்ளனர்.
இதில், ராஜா தேசிங்கு ஆங்கிலேயரை எதிர்த்து இளமையிலேயே வீர மரணம் அடைந்தவர் என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தகவல் முற்றிலும் தவறானது. ராஜா தேசிங்கின் தந்தை சொரூப் சிங் மறைவுக்குப் பிறகு, ராஜா தேசிங்கு செஞ்சி மன்னராக அரியணையேறினார்.
அப்போது, ஆற்காடு நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய கப்பத் தொகை அதிகளவில் நிலுவையில் இருந்தது. இந்தத் தொகையைக் கேட்டு ஆற்காடு நவாப் அனுப்பிய தூதனிடம் ராஜா தேசிங்கு கப்பம் கட்டட மறுத்ததுடன், செஞ்சியை சுதந்திர நாடு எனவும் அறிவித்தார். இதனால், ஆற்காடு நவாப்பின் பெரும் படை, செஞ்சி மீது படையெடுத்தது.
போரின் போது ராஜா தேசிங்கு கோட்டைக்குள் இருந்து போர் புரிந்திருந்தால். ஆற்காடு நவாப்பின் படைகள் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆனால், ஆற்காடு நவாப்பின் படைகள், வரும் வழியில் உள்ள கிராமங்களைச் சூறையாடியதுடன், கோவில்களையும் அழித்து வருவதை அறிந்து சினம் கொண்ட ராஜா தேசிங்கு, கோட்டையில் இருந்து வெளியேறி கடலி என்ற இடத்தில், ஆற்காடு நவாப்பின் படைகளை வழிமறித்து போர் புரிந்தார். இதில் வீர மரணம் அடைந்தார். ஆற்காடு நவாப்புடன் நடந்த இந்தப் போரை, ஆங்கியேருடன் நடந்த போர் என தவறாகத் தரப்பட்டிருக்கிறது. தவறான இந்தத் தகவலை திருத்தவும், சரியான வரலாற்றை மாணவர்களுக்குப் போதிக்கவும் கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments: