About Me

Monday, September 26, 2011

அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை


சென்னை, செப். 25: மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வையும், போனஸ் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  ஏறிவரும் விலைவாசி உயர்வினை ஈடுகட்ட அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்குகின்றன.  மத்திய அரசு 7 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை உயர்த்தி செப்டம்பர் 15-ம் தேதி அறிவித்துள்ளது. பொதுவாக இதுபோன்ற அறிவிப்பு வெளியான ஒரு சில தினங்களுக்குள் மாநில அரசும் கூடுதல் அகவிலைப்படியைக் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை தமிழக அரசு கூடுதல் அகவிலைப்படியை அறிவிக்கவில்லை.  போனஸ்: அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி தினத்தையொட்டி முன்கூட்டியே போனஸ் தொகையும், முன்பணமும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவது வழக்கம்.  இந்த நிலையில், போக்குவரத்துத் துறை, மின்வாரியம், சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, குடிசை மாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம், ஆவின் பால் நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களில் இன்னும் போனஸ் தொகை அறிவிக்கப்படவில்லை.  எனவே, அகவிலைப்படி உயர்வையும், போனஸ் தொகையையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments: