About Me

Monday, September 19, 2011

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!



ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!




திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் உள்ளது இலக்கமநாய்க்கன் பட்டி கிராமம். இந்த கிராமத்தின் கிழக்கில் உள்ள முளையாம்பூண்டி கிராமத்தை ஒட்டியுள்ள ஒரு சிரிய ஊர் காட்டூர்.

அமராவதி ஆற்றின் கிழக்கு கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊருக்கு, தென் பகுதியில் உள்ள தோட்டங்களில் முன்பு கிணறு தோண்டும் போது சில 'புதைகுழிகள்
' இருந்துள்ளன. அவற்றில் இருந்த மிகப்பெரிய மண்பானைகளை எடுத்து பார்த்த போது உள்ளே சில எலும்புத் துண்டுகள் இருந்ததாக சொன்னார்கள்.
நம் முன்னோர்கள், இறந்து போன தங்களின் பெற்றோர்களை மண்ணில் புதைப்பதற்கு பதிலாக 'மண் பானை'யில் வைத்து புதைத்து உள்ளனர். இப்படி இறந்தவர்களை புதைக்கும் குழிகளுக்கு 'மாண்டவர் குழிகள்' என்று பெயர்.
இந்த வழக்கம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று சரியாக கணக்கிடமுடியவில்லை. காட்டூரை அடுத்துள்ள கந்தப்பகவுண்டன் காடு என்று சொல்லும் இந்த தோட்டத்து நிலங்களில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிணறு தோண்டிய போது சில 'மாண்டவர் குழிகள்' இருந்துள்ளன.




அந்த காலங்களில் அதை 'பாண்டியன் குழி' என்று சொன்ன இந்த ஊர் பெரியவர்கள், இந்த குழிகளுக்கு ஒரு கதையையும் சொல்கிறார்கள். முந்தைய காலங்களில் வாழ்ந்த 'பாண்டியன்கள்' என்று சொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட இன மக்கள், தங்களுக்கு மரணம் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று சிவபெருமானிடம் போராடி 'சாகாவரம்' வாங்கி பிறந்தார்கள் என்றும், 'மரணமே' இல்லாமல் வாழ்ந்த அந்த மக்களில் மிகவும் வயதானவர்கள் பல வருட காலம் சாகமலே இருந்ததாகவும், வயதாகி முதுகு வளைந்து, கூன் விழுந்து, உயரம் குறைந்து, குழந்தையை போல சிறிய உருவமாக மாறிய பின்னர், சாகாமல் இருக்கும் அந்த முதியவர்களை தூக்கி இந்த மண் பானையின் உள்ளே வைத்து, அடுத்த சில நாட்களுக்கு அவர்கள், உண்டு உயிர் வாழத் தேவையான உணவு, தண்ணீர் போன்ற பொருட்களை தனித்தனியே மண் பாத்திரங்களில் எடுத்து, அதையும் அந்த பெரிய பானைக்கு உள்ளே வைத்து அந்த மண்பானையை மற்றொரு மண் தட்டத்தால் மூடி, நான்கு பக்கமும் கற்களால் அமைக்கப்பட்ட 'கற்குழியில்' அந்த மண்பானையை இறக்கி வைத்து, கற்குளிக்குமேலே பெரிய தட்டையான 'பலகை கல்லை' வைத்து மூடிவிடுவார்கள்.

உன்ன உணவு இருக்கும் வரையில் உயிர் வாழும் அந்த வயது முதிர்ந்த 'பாண்டியன்' சில நாட்களுக்கு பின்னர் உன்ன உணவில்லாமலும், சுவாசிக்க காற்றில்லாமலும் செத்துவிட்டார்கள் என்று ஒரு கதையை இந்த கிராமத்து பெரியவர்கள் சொல்கிரார்கள்.

நீன்ட நாட்களாக இங்கு இப்படிப்பட புதைகுழிகள் ஏதும் தென்படாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், முத்துசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருக்கும், முன்பு வெட்டப்பட்ட ஒரு பழைய கிணற்றின் பாம்பேறி (சுற்றுச்சுவர்) சரிந்து கிணற்றில் விழும் நிலையில் இருந்தது.

அதனால், கிணற்றின் நான்கு பக்கமும் சரிந்து விழுந்துகொண்டிருந்த மண்ணை எடுத்து விட்டு சுற்றுச்சுவர் கட்ட திட்டமிட்ட முத்துசாமி ஜே.சி.பி இயந்திரம் மூலம் கிணற்றின் நான்கு பக்கமும் சுமார் ஐந்து அடி ஆழத்துக்கு மண்ணை தோண்டி எடுத்துள்ளார்.

அப்படி மண்ணை தோண்டும் போது, நிலத்தில் நான்கு அடி ஆழத்தில் மண்ணில் புதைந்திருந்த மூன்று மண் பானைகள் கிடைத்துள்ளன. ஜே.சி.பி இயந்திரத்தின் பற்களில் சிக்கி புதைகுழியில் இருந்த மூன்று மண் பானைகளும் உடைந்துவிட்டன.(படம் 1)

ஆனாலும், அந்த பானைக்குள் இருந்து தண்ணீர் அல்லது உணவுகள் வைக்க பயன்படும் இரண்டு சிறிய மண் குவளைகள் (படம் 2) அந்த குவளைகள்  உருண்டு ஓடாமல் இருக்க பயன்படும் ஒரு  மண் திரவை (படம் 3) இப்போது பன்னீர் தெளிக்க பயன்படும் பன்னீர் கிண்ணம் போலவே உள்ள ஒரு கிண்ணம். கீழ் கிண்ணம் பெரியதாகவும், அந்த கிண்ணத்தின் கழுத்து பகுதி சிறுத்து விரல் நுனி மட்டும் உள்ளே செல்லும் அளவு சிறிதாக செய்யப்பட்ட ஒரு மண் பாத்திரமும் (படம் 4), மக்கி உளுத்துப் போன கொஞ்சம் எலும்பு துண்டுகளும் (படம் 5) அந்த பெரிய மண் பானையில் இருந்துள்ளது.

மாண்டவர்களை வைத்து அடக்கம் செய்யப்பட்ட மண்பானை சராசரியாக மூன்று அடி உயரம் இருக்கும், அந்த பானை ஓட்டின் கனம் முக்கால் அங்குலம் தடிமன் உள்ளது (படம் 6), நெருப்பில் சுட்ட பானையான அதில் உட்புறமும், வெளிப்புறமும் சிவப்பு நிறத்தில் உள்ளது. ஆனால் நடுப்பகுதி கருப்பு நிறத்தில் உள்ளது.




பெரிய பானையின் உள்ளே இருக்கும் சிறிய குவளைகள், மற்றும் கிண்ணம் இரண்டும் மிகவும் மெல்லியதாகவும், இப்போது உள்ள பித்தளை பாத்திரங்கள் போல மெல்லியதாக உள்ளது. அதில் ஒரு குவளையின் மீது பித்தளை பாத்திரங்களில் உள்ளது போலவே மெல்லிய கொத்து வைத்து டிசைன் செய்துள்ளார்கள். இந்த குழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள எலும்புகள் கையால் அழுத்தினால் எளிதில் நுனிங்கி விடுகிறது.

ஆற்றங்கரையில் மனிதன் வசிக்கத் தொடங்கிய ஆதி காலத்தில் இப்போது உள்ள அமராவதி ஆறு இன்னும் பெரிதாக இருந்திருக்கும், அப்போது ஆற்றின் கரையில் இந்த இடத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் நாகரீக வாழ்கையின் அடையாளம் கிடைத்துள்ளது, வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் ஆய்வாளர்களும் இந்த பாண்டவர் குழிகளை ஆய்வு செய்து நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற சிறப்பை வெளிக்காட்ட வேண்டும். அதற்கான புதை பொருட்களை முத்துசாமி (படம் 7) பாதுகாப்பாக  வைத்துள்ளார்.
படங்கள் மற்றும் கட்டுரை
பெ.சிவசுப்ரமணியம்
ஆத்தூர்.



நன்றி :நக்கீரன்



http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=144




No comments: