About Me

Sunday, November 27, 2011

அவசர வழி கூட இல்லாத பள்ளி வாகனங்கள்

ஈரோடு: விதிகளை மீறி இயங்கும் பள்ளி வாகனங்கள் அதிகரித்துள்ளது.
விபத்தின்போது மட்டுமே கண்டு கொள்ளும் அதிகாரிகள், பிற நேரத்தில் அவற்றை
கண்காணிப்பதில்லை.


பள்ளி வாகனங்கள் பெரும் விபத்தை சந்திக்கும்போது பெரிய அளவில் வாகன
தணிக்கை, பள்ளி ஆட்டோ, வேன், பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிற வர்ணத்தில் இருக்க வேண்டும்; அவசர வழி,
குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது; அனுபவம் வாய்ந்த, விபத்தில்
சிக்காத டிரைவரை பயன்படுத்த வேண்டும்; மொபைல் ஃபோன் பயன்படுத்தக்கூடாது என,
பல விதிகளை அரசு அறிவித்தது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து,
ஆசிரியை உட்பட மாணவர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வாகனம்
விபத்துக்குள்ளானால், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் வரை கைது செய்யும்
நடவடிக்கையும் பாய்ந்தது.இதனால், இரண்டு ஆண்டில் பள்ளி நிர்வாகங்கள்,
தங்களுக்கு சொந்தமான பஸ், வேன் போன்றவற்றை விற்றுவிட்டு, பள்ளிக்கு
குழந்தைகள் வந்து சேரும் பொறுப்பை பெற்றோர்களே பார்த்துக் கொள்ள வேண்டுமென
முடிவு செய்தனர்.இதை சாதகமாக்கி, பல தனியார் வேன், மாருதி ஆம்னி,
ஆட்டோக்கள், "பள்ளி வாகனம்,' என்ற அனுமதியை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்
பெற்று, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக குழந்தைகளை ஏற்றி,
போலீஸார் வாகன சோதனையை தவிர்க்க, சந்து, பொந்துகளில் சென்று, பள்ளியை
அடைகின்றன. விபத்து நடந்தால், வேன் டிரைவர் மற்றும் பெற்றோருடன் பொறுப்பு
முடிகிறது. ஆனால், ஆபத்து தொடர்கிறது.பள்ளி வாகனங்களில் அதிக குழந்தைகளை
ஏற்றும் வகையில் வாகனத்தை வடிவமைத்து, அவசர வழிகள் கூட வைக்காமல்
இயக்குகின்றனர். அதேநிலைதான், மாருதி ஆம்னி, ஆட்டோவிலும் நடக்கிறது.

ஈரோடு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் கூறியதாவது:பள்ளி
வாகனங்களுக்கு மட்டும் மஞ்சள் வர்ண பெயின்ட் அடிக்க வேண்டும். பள்ளி
வேனுக்கு ஒரு சீட்டுக்கு, மூன்று மாதத்துக்கு, 50 ரூபாயும், பள்ளி பஸ்களில்
ஒரு சீட்டுக்கு, மூன்று மாதத்துக்கு, 100 ரூபாயும், பள்ளிக் குழந்தைகளை
ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் ஒரு சீட்டுக்கு, 250 ரூபாயும் செலுத்தி
இயக்கலாம்.தனியார் வாகனங்கள் மஞ்சள் வர்ணம் அடிக்க தேவையில்லை.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் குழந்தைகளை ஏற்ற வேண்டும். பள்ளி
வாகனங்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். அனுமதி பெறாமல்
இயங்கும் வாகனம், அத்துமீறும் வாகனங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: