About Me

Wednesday, August 31, 2011

லஞ்சம் கேட்பவர்களின் நாக்கு மற்றும் கைகளை துண்டிக்க சட்டம் வேண்டும்: எச்.ராஜா ஆவேசம்


உளுந்தூர்பேட்டை:லஞ்சம் கேட்பவர்களின் நாக்கையும், கையையும் துண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டுமென, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பா.ஜ., சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசியதாவது:ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்டவர் பிரதமர் மன்மோகன் சிங். ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவுக்கு, ஊழல்வாதியான தாமசை நியமித்துள்ளார். அவர் எப்படி ஊழலுக்கு எதிராக செயல்பட முடியும். இக்குற்றச்சாட்டுகளுக்காக, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். நாட்டில் ஊழல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.எகிப்து, ஏமன், லிபியா என அரபு நாடுகளில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு, ஊழல் இவையே காரணங்களாகும். இவற்றால் தான், அந்த நாடுகளில் மக்கள் புரட்சி செய்து ஆட்சியை மாற்றினர்.இந்தியாவிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க., அமைச்சர் ராஜா, கனிமொழி சிறையில் உள்ளனர்.

காங்., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயராமல் பார்த்து கொண்டோம்.லஞ்ச, ஊழல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டில் லஞ்சம் கொடுக்காத நிலை ஏற்பட வேண்டும்.சட்டப்படி கடமைகளை செய்பவர்களுக்கு எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும். எதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள். 120 கோடி மக்களும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஊழல் என்பது சமூக விரோதம். லஞ்சம் கேட்பவர்களின் நாக்கையும், கையையும் வெட்டுவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்.ஹசன்அலி 70 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளார். அப்படி என்றால் அவரது வருமானம் எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள். வரி ஏய்ப்பு செய்த ஹசன் அலியை ஏன் கைது செய்யவில்லை. அதை விடுத்து இன்று கஷ்டப்பட்டு நடிப்பின் மூலம் சம்பாதித்த மம்முட்டி, மோகன்லால் வீடுகளில், "ரெய்டு' நடத்துகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

Dinamalar - No 1 Tamil News Paper

புதிய வகுப்பு அறைகள் ரூ.1,082 ரூபாய் ஒதுக்கீடு



சென்னை:""இந்த ஆண்டு புதிய வகுப்பறைகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி திட்டங்களை மேற்கொள்வதற்கு 1,082 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று கேள்வி-நேரத்தின் போது நடந்த விவாதம்:குமரகுரு - அ.தி.மு.க: உளுந்தூர் பேட்டை தொகுதி சேந்தநாடு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்குமா?கலைராஜன் - அ.தி.மு.க: தி.நகர் தொகுதி, புதூர் மேல்நிலைப் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து கிடக்கிறது. விளையாட்டு மைதானமும் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது.

காம்பவுண்ட் சுவர் கட்டித்தரப்படுமா? விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படுமா?அமைச்சர் சி.வி.சண்முகம்: சேந்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், 12 வகுப்பறைகள், ஒரு ஆய்வுக்கூடம், ஒரு கழிவறை யூனிட், 1 குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள், 43 லட்சத்து 50 ஆயிரத்தில் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
இந்த ஆண்டு, 4,444 வகுப்பு கட்டடங்கள் கூடுதலாக கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதி திட்டங்களுக்கு மட்டும் 1,082 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Dinamalar - No 1 Tamil News Paper

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு


சென்னை: தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் கவர்னராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய கவர்னராக ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ரோசய்யாவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நியமித்து உத்தரவிட்டார். கவர்னராக பொறுப்பேற்க வசதியாக, ரோசய்யா தான் வகித்து வந்த ஆந்திர எம்.எல்.சி., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்த அவரை, மாநில முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற ரோசய்யாவுக்கு, கவர்னர் மாளிகை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், ரோசய்யாவுக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் இவர்: ரோசய்யா, ஆந்திர சட்டசபையில் தொடர்ந்து ஏழு முறை உட்பட மொத்தம் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை பெற்றவர். இவர், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேம்ரூ என்ற கிராமத்தில் 1933, ஜூலை 4ல் பிறந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் சீனியர் தலைவர் என புகழப்படும் ரோசய்யாவிற்கு, காங்கிரஸ் கட்சி மேலிடத்திலும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளது

Dinamalar - No 1 Tamil News Paper

Tuesday, August 30, 2011

ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலைமை கூட வரலாம்.


புதுடில்லி:"நாட்டில் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் பிரச்னையை கவனமுடன் அணுகவில்லை என்றால், ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலைமை கூட வரலாம். விவசாயத் துறையை ஊக்கப்படுத்த, சலுகைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். நாட்டுப்புற மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க, பார்லிமென்டின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்' என, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பார்லிமென்டில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் எழுந்து, விவசாயிகளின் பிரச்னை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டின் பிற துறைகளோடு ஒப்பிடுகையில், விவசாயத் துறை மட்டும் மிகவும் கவனிப்பாரற்று கிடக்கிறது. விவசாயிகள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தங்களது பிரச்னைகளை அரசாங்கம் தீர்க்காதா என ஏங்கியபடி, மிகவும் வருத்தத்தில் விவசாயிகள் உள்ளனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை, விவசாயத்துடன் இணைக்க வேண்டும். ஏனெனில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உள்ளது.

விவசாயத் துறை சந்தித்து வரும் பிரச்னைகளை தீர்க்க, சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும். போதுமான விலை கிடைக்காததால், கிழக்கு கோதாவரி உட்பட, ஆந்திராவில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், நெல் உற்பத்தி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். நெல் விளைவித்தால், செலவழித்த தொகை கூட கிடைப்பதில்லை என புலம்புகின்றனர்.நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதேபோன்ற நிலையைத் தான் சந்தித்து வருகின்றனர். அதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம், இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காமல், அசட்டையாக இருந்தால், ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டிற்கே கூட திண்டாடும் சூழ்நிலை உருவாகி விடலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும், விவசாயிகளின் பிரச்னைகளைக் கண்டுணர்ந்து, அப்பிரச்னையை தீர்ப்பதற்கென்று, அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற மக்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சுக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதால், விவசாயத்தை "தேசிய தொழிலாக' அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன், பல மாநில எதிர்க்கட்சிகள், தங்கள் மாநிலங்களில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் உரத்தட்டுப்பாடு குறித்தும் புகார் தெரிவித்தன.

Dinamalar - No 1 Tamil News Paper

Monday, August 29, 2011

33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி

சென்னை: அரசு பள்ளிகளில் மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார். இதற்காக அவருக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் வகையில் 775 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியதுடன் அந்த பள்ளிகளில் கூடுதலாக 13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணி இடங்களையும் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டது ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதேபோல் முத்துக்குமரன் கமிட்டி பரிந்துரைப்படி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இருப்பது பாராட்டுக்குரியது. மேலும், மூன்று பருவ முறை அறிமுகம், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட புதிய திட்டங்களை வரவேற்கிறோம்.

1978 முதல் 1990 வரை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டபோது போல தற்போது அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 2 தொழிற்கல்வி ஆசிரியர் பணி இடங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் முருக.செல்வராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை,

உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளில் 3 ஆயிரத்து187 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும், 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர் பணி இடங்களும் ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கு முதல்வர் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ப.சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிஞ்சுக் குழந்தைகளின் புத்தக சுமையைக் குறைத்து மதிப்புக்கூட்டு முறையில் 3 பருவங்களாக தேர்வுகள் நடத்தப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை வரவேற்கிறோம். போலி மதிப்பெண் சான்றிதழ்களை ஒழிக்கும் வகையில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய சான்றிதழ் வழங்கும் முறை பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Oneindia Tamil

பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்


சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை, தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில், சமீபத்தில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார்.
மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன்கீழ், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர். இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, &'எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்&' என்றார்.
சம்பளம் எவ்வளவு? பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது